அரசியல்

ஆள தெரியாத மோடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி

ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.

ஆள தெரியாத மோடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி
TN Minister Govi Chezhian comment about pm modi
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவில் செழியன் அவர்கள் ஏற்பாட்டில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆடுதுறையில் உள்ள வீரசோழன் திருமண மண்டபத்தில் நடந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை:

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்தார். மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் அருள் பிரகாசம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அடையாள அட்டை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், “ஆள தெரியாத மோடி ஒன்றிய இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பொருளாதார வீழ்ச்சி பெரிதளவில் ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்த தெரியாத பிரதமர் பண மதிப்பீடு என்ற பெயரில் காகிதம் இல்லை, பணம் இல்லை, டிஜிட்டல் பரிவர்த்தனை என கூறினார். பின்னர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதனை வழி நடத்துவர் தான் அரசன் அப்படி எதைப் பற்றியும் சிந்திக்காமல் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி பின்னர் அதில் தோற்றவர்தான் பிரதமர்.

மதக்கலவரத்தை தூண்டும் மோடி:

பொருளாதாரத்தில் மந்த நிலையை உருவாக்கி சீரழித்தவர் மோடி, மத கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது ஒன்றிய அரசின் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை தடுப்பது, தன் கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநரை விட்டு ஜனநாயகத்தை மீறுவது, உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி அவர்கள் இன்று ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது” எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பேருந்தலைவர் சுந்தர ஜெயபால், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.க.அண்ணாதுரை, திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுபா.திருநாவுக்கரசு, ஆடுதுறை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோசி இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர் மிசா.மனோகரன், உதயா ரவிச்சந்திரன், கூகூர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.