அரசியல்

TVK Maanadu: மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர்.. மேடையில் ட்விஸ்ட் வைத்த விஜய்!

”1967, 1977-ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் 2026-ல் நடக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

TVK Maanadu: மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர்.. மேடையில் ட்விஸ்ட் வைத்த விஜய்!
TVK Leader Vijay Surprise Candidate Announcement Shakes Madurai maanaadu
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்றது.

மதுரை, பாரபத்தி பகுதியில் நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது திமுகவினையும், பாஜகவினையும் கடுமையாக தாக்கி பேசினார்.

தவெக தலைவர் விஜய் பேசுகையில், ”மார்க்கெட் போனதுக்கு அப்புறம், ரிட்டையர்ட் ஆனதுக்கு அப்புறம் அரசியலுக்கு வரல. இனிமே இது தான் என் வேலையே. இந்த விஜய், உங்க விஜய், உங்களுக்கான விஜய், உங்களுக்காக சேவை செய்ய நான் வாறேன்.

பொதுவாக எல்லோரும் கட்சியினை ஆரம்பிச்சுட்டு ஒவ்வொரு வீடாக செல்வார்கள். ஆனால் நாங்க, எல்லோருடைய வீட்டிற்குள்ளும் போன பிறகு தான் கட்சியே ஆரம்பிச்சு இருக்கோம்” என குறிப்பிட்டார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று உங்களுக்கு சர்ப்பரைஸ் சொல்லப் போகிறேன் என்றார். நமது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்போகிறேன் என விஜய் கூறியதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

”மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர், விஜய்.. உங்கள் விஜய்” என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்ட நொடியில், ஒட்டுமொத்த மாநாட்டு திடலும் 'TVK..TVK..TVK' என கோஷமிட்டனர். விஜய் மதுரை கிழக்குத் தொகுதியில் தான் களமிறங்கப் போகிறார் என எண்ணியிருந்த நிலையில், தனது பேச்சில் ட்விஸ்ட் வைத்தார்.

மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் விஜய், மதுரை மத்தியத் தொகுதி வேட்பாளர் விஜய், மேலூர் தொகுதி வேட்பாளர் விஜய் என அடுத்தடுத்து ஒவ்வொரு தொகுதியின் பெயரையும் குறிப்பிட்டு அதன் வேட்பாளர் விஜய் என கூறவும், தொண்டர்கள் மத்தியில் சற்று குழப்பம் தோன்றியது.

தொடர்ந்து பேசிய விஜய், “என்ன பார்க்குறீங்க. இந்த விஜய் தான் உங்க சின்னம். இன்னும் சிம்பிளா சொல்ல வேண்டும் என்றால், உங்கள் வீட்டில் இருக்கிற ஒருத்தர் தான் தான் வேட்பாளராக நிற்க போகிறார். அந்த வேட்பாளரும், நானும் வேற வேற இல்ல. என் முகத்திற்காக அவருக்கு ஓட்டு போட்டீங்கனா, அது எனக்கு போட்டது மாதிரி. தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார் விஜய்.

தொடர்ந்து பேசிய விஜய், "அம்பேத்கரை, காமராஜரை, நல்லக்கண்ணு அய்யாவை தோற்கடித்தது சினிமாக்காரன் அல்ல, அரசியல்வாதி தான். எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது; எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது” என்றார்.