அரசியல்

கரூர் துயரம்: 'முதல்வர் மீது பழி சுமத்துகிறார் விஜய்'- திருமாவளவன் கடும் தாக்கு!

"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம்: 'முதல்வர் மீது பழி சுமத்துகிறார் விஜய்'- திருமாவளவன் கடும் தாக்கு!
Vijay Blaming Chief Minister- Thirumavalavan
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் நடந்த பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வெளியிட்ட காணொலியில் 'முதலமைச்சர் மீது பழி சுமத்தும் வகையில்' பேசியிருப்பதாகக் குற்றம்சாட்டி, விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது விஜய்யின் அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் வீடியோவும் திருமாவளவன் விமர்சனமும்

கடந்த செப்டம்பர் 27 அன்று இரவு கரூரில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் உண்மை வெளிவரும்" என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ குறித்து அறிக்கை வெளியிட்ட திருமாவளவன், அந்தப் பேரவலம் நிகழ்ந்தபோது தமிழ்நாடு அரசு, குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் பெருகாமல் தடுத்தன என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும், அவர் மீதான பரிவுணர்ச்சியும் வீண் என்று எண்ணிட வைத்துள்ளது என்றும் திருமாவளவன் சாடியுள்ளார்.

அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி

நடந்த பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாகத் தெரியவில்லை என்று கூறிய திருமாவளவன், பத்து மணி நேரமாகத் தன்னைக் காணக் காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைப்பதற்கும் இடமில்லாத அளவுக்கு ஏற்பட்ட கடும் நெரிசலால் நா வறட்சிக்குள்ளாகி, மிதிபாடுகளில் நசுங்கி மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டு உயிரிழந்தனர். இவை "நெரிசல் சாவுகள் தான்" என்பது கண்கண்ட பேருண்மை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உண்மையை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். இதன்மூலம், "அவர் இந்த உயிர்ப்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக்க் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

விஜய் பாஜக-வின் கருவியா?

இந்தச் சம்பவம் வெளியுறையிலிருந்து யாரோ தூண்டிவிட்டதனால் அரங்கேறியது என்கிற தவறான கருத்துருவாக்கத்தை விஜய் தரப்பினர் உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று திருமாவளவன் சாடினார்.

"பாஜக சொல்வதையே விஜய் அவர்களும் சொல்கிறார்" என்று பாஜக மேலிடம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைச் சார்ந்த அனுராக் தாகூர் கூறுவதிலிருந்தே, விஜய் யார் பிடியில் சிக்கி உழலுகிறார் என்பதை அறியமுடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாஜக உண்மை அறியும் குழுவை அமைத்திருப்பதும், திமுக அரசுக்கு எதிராக இச்சூழலை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பதும், "விஜய், பாஜகவினரின் கருவி தான்" என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இவர்களின் அரசியல் சதிதிட்டங்களை முறியடிக்க அனைத்துச் ஜனநாயக சக்திகளும் ஒரணியில் திரள வேண்டும்" என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.