அரசியல்

முதலமைச்சரை அங்கிள் என கூறிய விஜய் – அமைச்சர் மதிவேந்தன் சொன்ன பதில்

தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

 முதலமைச்சரை அங்கிள் என கூறிய விஜய் – அமைச்சர் மதிவேந்தன் சொன்ன பதில்
தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் மதிவேந்தன்
ராசிபுரம் சட்டமன்றத்தொகுதியில் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் குறைகேட்டும், குறைகள் இருந்தால் தன்னை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறி அமைச்சர் மதிவேந்தன் பொதுமக்களிடம் விசிட்டிங் கார்டு வழங்கினார்.


அமைச்சர் திடீர் ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நேரடியாகப் பொதுமக்களைச் சந்தித்து பகுதிமக்களின் குறைகளைக் கேட்டு அதற்கான தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் மதிவேந்தன் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வரும் வகையில், இன்று ராசிபுரம் 3வது வார்டு உட்பட்ட சிவானந்தா சாலை, புதுப்பாளையம் சாலை, ஆசிரியர் நகர், அங்கம்மாள் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து பொதுமக்களிடம் குறைகளை அமைச்சர் மதிவேந்தன் கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தெருவிளக்கு, சாக்கடை அடைப்பு, குடிநீர் நேரம் முறைகளைத் தெரிவிக்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் திமுக ஆட்சியில் ராசிபுரத்தில் கொண்டு வரப்பட்ட சாதனை திட்டங்களைப் பொதுமக்களிடம் கூறியும், குறைகளைக் கூறிய விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.


தேர்தல் களத்தில் சந்திப்போம்

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2 மாதமாகப் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். தற்போது ராசிபுரம் 3வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்தும் அவர்கள் கூறும் குறைகளைக் குறிப்பெடுத்து மிக விரைவாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

தவெக மாநாட்டில் திமுகவை விஜய் தாக்கிப் பேசியது தொடர்பாக கேள்விக்கு, விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ளார். என்ன சொல்வது என்று தெரியாமல் ஆர்வத்தில் சொல்லி வருகிறார். அவர் மாநாட்டில் சொல்லும் கருத்துக்கள் நாகரிகமாக இல்லாவிட்டாலும், அவர் எப்படிப்பட்ட கருத்துக்கள் சொன்னாலும் தேர்தல் களத்தில் சந்திப்போம். தேவை இல்லாமல் பதில் கூறுவது எங்களுக்கு அவசியம் இல்லை. கண்டிப்பாக மக்கள் மூலமாக அந்தப் பதிலை நாங்கள் கூறுவோம்.

உரிமையாக சொல்லி இருக்கிறார்


விஜய் முதலமைச்சரை அங்கிள் எனக்கூறியதற்கு குறித்தான கேள்விக்கு, முதலமைச்சரை சின்னக் குழந்தைகள் தாத்தா, அவரது வயது உடையவர்களுக்கு அவர் நண்பர், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவர் அப்பா, எல்லா கட்சிக்காரர்களுக்குத் தலைவர், தமிழக மக்களுக்கு அவர் முதலமைச்சர் எனப் பல்வேறு முகங்கள் உள்ளது. அது அவரது விருப்பம் உரிமையாகச் சொல்லிட்டு போறார்.

திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் வைத்தாலும், வருகின்ற 2026 தேர்தலில் வாக்குகள்மூலம் பொதுமக்கள் அதனை நிரூபிப்பார்கள் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.