அரசியல்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு!
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.. ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மூன்று முக்கிய முடிவுகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது, “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது.

அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விரைவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். மூன்றாவதாக, தேர்தலில் இப்போதைக்கு நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

கூட்டணி முறிவுக்குக் காரணம் என்ன?

மேலும் அவரிடம் கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம், திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டு என்பதில் உங்களது கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” என்றார்.

பாஜகவுடனான உறவில் விரிசல் பின்னணி

முன்னதாக, ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு 2024 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் டெல்லியில் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த பிறகு, 2023 ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் கைகோர்த்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித் ஷா தன்னை சந்திக்காதது வருத்தம் அளித்ததாகவும், தாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை பாஜக தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் சமக்ரா சிக்ஷா திட்ட நிதியில் உள்ள ரூ.2,151 கோடியை வழங்க மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வந்தபோது அவரை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.