விளையாட்டு

அக்மார்க் ஆல்ரவுண்டர்.. ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

தனது சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைப்பெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.

அக்மார்க் ஆல்ரவுண்டர்.. ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
All-Time Great All-Rounder: Andre Russell Bids Goodbye to International Cricket
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், இந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்மார்க் ஆல்ரவுண்டர்:

டி20 போட்டிகளின் தன்மைக்கு ஏற்ற வீரர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால், மேற்கிந்திய தீவுகள் அணியினை சேர்ந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதில் ஆண்ட்ரே ரஸ்ஸல் பெயர் தவிர்க்க முடியாதது.

களத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருந்தால், அணியின் கேப்டனுக்கு ஏதோ வகையில் ஒரு நம்பிக்கை இருக்கும். ரஸ்ஸல், ஸ்லோ மீடியம் பால் போட்டு விக்கெட்கள் எடுப்பார். எவ்வளவு பெரிய மைதானமாக இருந்தாலும் பந்தை மைதானத்திற்கு வெளியே தூக்கி சிக்சர் அடிப்பார். ஒரு மேட்சுக்கு குறைந்தது தனது பீல்டிங்கினால் மட்டும் 15- 25 ரன்கள் வரை கட்டுபடுத்துவார்.

கடைசி சர்வதேச போட்டி:

பேட்டிங்கில் சொதப்பினால் கூட பந்துவீச்சில் அல்லது பீல்டிங்கில் திறமையாக செயல்பட்டு அதனை ஈடு செய்வார். இப்படிபட்ட அக்மார்க் ஆல்-ரவுண்டரான 37 வயதாகும் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது சொந்த மண்ணான ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளுடன் 37 வயதான ரஸ்ஸல் ஓய்வு பெறுகிறார். மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்கள் (ஜூலை 20, ஜூலை 22) ஜமைக்காவில் நடைப்பெறுகிறது.

2 முறை உலகக் கோப்பை சாம்பியன்:

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணி டி20 உலகக் கோப்பை வென்றது. அதில் ஆண்ட்ரே ரஸ்ஸலின் பங்கு அளப்பரியது. இதுவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரஸ்ஸல், 1087 ரன்கள் எடுத்துள்ளார். 61 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ரஸ்ஸல் தொடர்ந்து பிரிமீயர் லீக் தொடர்களில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் நடைப்பெறும் அனைத்து பிரிமீயர் லீக் டி20 போட்டிகளிலும் ஆண்ட்ரே ரஸ்ஸல் விளையாடி வருகிறார். இதுவரை 561 பிரிமீயர் லீக் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஸ்ஸல், 9316 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 168.31. பந்து வீச்சினை பொறுத்தவரை 485 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல், கடந்த 2019-ம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஓய்வு முடிவினை ரஸ்ஸல் அறிவித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.