சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட தமிழகத்தில் பல மாநகராட்சிகளில் வீடு வீடாக குப்பைகளை பெற்று செல்வதற்காக 3 சக்கர பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பேட்டரி குப்பை வாகனம் விபத்தை ஏற்பத்திய வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் 3 சக்கரி பேட்டரி வாகனங்களை இயக்குவது சட்டவிரோதம் என தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்திருநகர் லட்சுமிநகர் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி குப்பை வாகனம், மோதியதில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 3 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதனால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி குழந்தையின் தந்தை சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பேட்டரி குப்பை வாகனத்தை இயக்கியவர் இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் தான் வைத்துள்ளார். இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தவர் மூலம் 3 சக்கர பேட்டரி வாகனத்தை இயக்க செய்தது சட்டவிரோதம் எனவும், விபத்தை ஏற்படுத்திய பேட்டரி வாகனத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் இன்சூரன்ஸ் செய்திருந்த போதிலும் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர் மூலம் வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய சிறுமிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாயை வழங்கி விட்டு அதனை மாநகராட்சியிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.