தமிழ்நாடு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், கோவிலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்

கோவில் ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் கோவிலுக்கு விரைந்தனர்.
கோவில் வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் துருவித் துருவி ஆராயப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் தரப்பில், “கோவிலுக்கு வந்த மின்னஞ்சல் மிரட்டல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது, கபாலீஸ்வரர் கோவிலில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்து வருகின்றனர். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.