தமிழ்நாடு

நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பரபரப்பான சூழல் உருவானது.

நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!
நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!
சென்னை விமான நிலையத்திற்கு கொல்கத்தாவிலிருந்து 170 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். பயணி வலியால் துடிப்பதைக்கண்ட விமான பணிப்பெண்கள் பார்த்துவிட்டு, விமானியிடம் தகவல் தெரிவித்தனர்.

சாதுர்யமாகச் செயல்பட்ட விமானி

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்ததோடு, சென்னையில் தரையிறங்க, இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்ற சூழ்நிலையில், சாதுர்யமாகச் செயல்பட்ட விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு, பயணி ஒருவர் விமானத்துக்குள் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், விமானத்தைக் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, சென்னையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்றும், மேலும் விமானத்தைத் தரை இறங்குவதற்கு, வரிசையில் காத்திருக்க வைக்காமல் அவசரகால அடிப்படையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அவசர கால அடிப்படையில், தரையிறங்க அனுமதி அளித்தனர். மேலும் சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்துள்ளனர். கொல்கத்தா விமானம் 35 நிமிடங்கள் முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கி நின்றது.

மருத்துவமனையில் அனுமதி

விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும், மற்ற பயணிகளை இறங்க அனுமதிக்காமல், விமான நிலைய மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி, பயணியைப் பரிசோதித்து விட்டது, பயணியை விமானத்திலிருந்து, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஆம்புலன்ஸுக்கு மாற்றினர். அதன் பின்பு மருத்துவக் குழுவினர் பயணியைச் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.

விமானிக்குப் பாராட்டு

விமானத்துக்குள் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததற்காக, விமானத்தில் பயணித்த சக பயணிகள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் விமானியை வெகுவாகப் பாராட்டினர்.