தமிழ்நாடு

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது

கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்.


தகைசால் தமிழர் விருது

நாட்டின் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு 2025ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இஸ்ரோ தலைவருக்கு விருது

மேலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதற்காகத் தமிழக அரசின் அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார்.

உலக கேரம் சாம்பியன் காசிமாவிற்கு முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார்.சிறந்த நகராட்சிக்கான விருது ராஜபாளையம் நகராட்சிக்கு முதல் பரிசாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ராமேஸ்வரத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சிக்கு முதல் பரிசு

சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு ஆவடிக்கும், 2வது பரிசு நாமக்கல் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலமாக முதல் பரிசாக 6வது மண்டலத்திற்கு ரூ.30 லட்சமும், இரண்டாம் பரிசாக 13வது மண்டலத்திற்கு ரூ.20 லட்சமும் கொடுக்கப்பட்டது.