தமிழ்நாடு

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வர்.

குறிப்பாக ஆண்டிற்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் 20 முதல் 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டுச் செல்வதுடன் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வர்.

அதன்படி சித்ரா பௌர்ணமி தினமான இன்று இரவு 8:47 மணி முதல் நாளை திங்கட்கிழமை இரவு 10:37 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலப் பாதை மாடவீதி உள்ளிட்டவைகளில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதிகளும், திருவண்ணாமலை மாடவீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிப்பிட வசதிகளும், முறையாக செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மாநகரம் முழுக்க கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் 831 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4533 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 9342 நடைகள் இயக்கப்படுகின்றது.

நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசிக்கும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவிலில் பல்வேறு இடங்களில் ராட்சத மின்விசிறிகளும் ஏர் கூலர்களும் வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மோர், பிஸ்கட்டுகள் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் பெண் பக்தர் ஒருவர் மயக்கம் அடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த பக்தர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த அவர்கள் பெண் பக்தரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.