தமிழ்நாடு

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா
சென்னையில் கோகைன் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், சப்ளையர் பிரதீப் குமார் உள்ளிட்டோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரப்படுத்தி உள்ள போலீசார் போதைப்பொருள் சப்ளையரான பிரதீப்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் விற்பனை

விசாரணையில் பல்வேறு கட்ட அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரும் இதில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து தான் சப்ளையர் பிரதீப் குமார் கோகைன் மற்றும் மெத்தபெட்டமைன் வாங்கி, கூட்டாளிகளுடன் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களின் முக்கிய கூட்டாளி பயாஸ் ஷமேட் என்கிற பயாஸ் அகமது என்றும், ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டை கொகைன் பதுக்கி வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்ததாக போலீஸ் காவலில் பிரதீப் குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் கைது

காங்கிரஸ் எம்பி ஒருவரிடம் நெருக்கமாக இருந்தவர் பயாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரும்பாக்கம் வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு ஜாமினில் வெளியே வந்தவன், நடிகர் ஸ்ரீகாந்த் கைது நடவடிக்கையின்போது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் எதிர்புறம் பொதுமக்களோடு கலந்து இருந்து போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நோட்டமிட்டு தனது கூட்டாளிகளான கெவின் உள்ளிட்டோரிடம் தெரிவித்து வந்ததும் ஸ்ரீகாந்த் சிறைக்கு அனுப்பும்போது தகவல் கூறிவிட்டு செல்போனை ஆப் செய்து விட்டு தலைமறைவான நிலையில் சில நாட்களில் போலீசார் அவரை கைது செய்ததும் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் பதுங்கி இருந்த ஜானிடம் போதைப்பொருட்களை சென்னைக்கு கடத்தி வரும் பொறுப்பை, பிரதீப்குமார் தான் செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் யார் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளோம், எவ்வளவு பணம் சம்பாதித்தோம், யாரிடம் பணம் கொடுத்துள்ளோம் போன்ற தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜாமின் வழங்கி உத்தரவு

இந்த நிலையில் சிறையில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போதைபொருள் வழக்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ரூ.10,000க்கான சொந்த ஜாமினில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.