தமிழ்நாடு

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 4 இளைஞர்கள் கைது

இவர்களிடம் இருந்து 6.5 கிராம் மெத்தபெட்டமைன், 7 எல்எஸ்டி ஸ்டாப் ரக போதைப்பொருள், 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல்

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 4 இளைஞர்கள் கைது
சென்னை மாதவரத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
சென்னையில் சமீப காலமாகப் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்பனையை முழுவதும் தடுக்கும் வகையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

4 பேர் கைது

சென்னையில் போதைப்பொருளை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாதவரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ரகசிய தகவலின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை மாதவரம் அருள்நகர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்ட 4 இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாதவரத்தைச் சேர்ந்த ஈஸ்வர், அபிஷேக், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த லிங்கேஷ்வரன், பெரம்பூரைச் சேர்ந்த வசந்தராஜ் ஆகியோரை மாதவரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரைகள் பறிமுதல்

இவர்களிடமிருந்து 6.5 கிராம் மெத்தபெட்டமைன், 7 எல்எஸ்டி ஸ்டாப் ரக போதைப்பொருள், 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேரும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்குப் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களுக்குப் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? எங்கிருந்து போதைப்பொருள் கிடைத்தது? பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.