தமிழ்நாடு

ரவுடி நாகேந்திரன் மரணம்: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு.. போலீசார் தீவிரம்!

ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார் யார் என்ற பட்டியலைச் சென்னை காவல்துறை சேகரித்து வருகிறது.

ரவுடி நாகேந்திரன் மரணம்: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் பட்டியல் சேகரிப்பு.. போலீசார் தீவிரம்!
Chennai Police Investigation
வடசென்னையின் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார் யார் என்ற பட்டியலைச் சென்னை காவல்துறை சேகரித்து வருகிறது.

நாகேந்திரன் மரணம் மற்றும் இறுதி ஊர்வலம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நாகேந்திரன் முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன், கடந்த 9-ஆம் தேதி உயிரிழந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல், நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று (அக். 12) நாகேந்திரனின் இறுதி ஊர்வலம் வியாசர்பாடி எஸ்.எம். நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.

போலீசாரின் அதிதீவிர கண்காணிப்பு

நாகேந்திரனின் இறுதிச் சடங்குகள் மற்றும் ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும், கூடும் ரவுடிகளைக் கண்காணிக்கவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முழுவதும் அதிதீவிர குற்றத்தடுப்புப் பிரிவு, ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் அடங்கிய மிகப் பெரிய போலீஸ் படை அங்கு ரகசியமாகக் குவிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது.

போலீசார், ட்ரோன் மூலமாகவும், அஞ்சலி செலுத்த வந்தவர்கள், ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், சுடுகாட்டில் இருந்தவர்கள் என அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

ரவுடிகள் கைது நடவடிக்கை

தற்போது, போலீசார் இந்த வீடியோ காட்சிகளை வைத்துப் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் எத்தனை பேர், அவர்கள் யார் யார் என்ற பட்டியலைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பட்டியலை வைத்த், விரைவில் அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.