தமிழ்நாடு

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து வகையான விதிமீறலுக்கு  மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு
ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு
சென்னையில் ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 வழக்குகளை போக்குவரத்து காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டறிந்து அவர்களுக்கும் சலான் அனுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக போக்குவரத்து போலீசார் 25 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். சமீபத்தில் போக்குவரத்து போலீசார் கும்பலாக நின்று துரத்தி துரத்தி பிடிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஐந்து வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதித்தால் போதும் என போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல் ஆகியவற்றிற்கு மட்டுமே அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, 25 வகையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த 5 மட்டுமே கவனம் செலுத்த போக்குவரத்து போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து தடை செய்யப்பட்ட வழியில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.