தங்க நகைகள் கொள்ளை:-
Robbery Gang Arrest in Chennai : சென்னை ஓஎம்ஆர், பிடிசி சந்திப்பு பல்லவன் குடியிருப்பில் ஐடி ஊழியர் டில்லி பாபு உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை சம்பவம் கடந்த 9ஆம் தேதி நடந்தது.இது குறித்த புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் பெண்கள் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட எழில் நகரைச் சேர்ந்த சுமதி, மீனா, ரம்யா, கஸ்தூரி, கலைவாணி ஆகியோரை கண்ணகி நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 24 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
5 பெண்கள் கைது
கைதான பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமதி தலைமையில் தான் இந்த பெண் கும்பல் செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. இந்த கும்பல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டை பூட்டி விட்டு சாவியை பூந்தொட்டிகளில் மறைத்து வைக்கப்படுவதை கண்டறிந்து அந்த வீடுகளை குறிவைத்து திருடுவதை தங்களது ஸ்டைலாக வைத்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பட்டப்பகலில் சர்வசாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாக கைதான பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 5 பேரையும் போலீசார் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.