தமிழ்நாடு

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா..  கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையைச் சேர்ந்தவர் திருநங்கை விமலா. இவர் கானா பாடல்கள் பாடுபவர். இவர் இன்று அதிகாலையில் மதுபோதையில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் குமார், தேனாம்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் ஆகியோருடன் காரில் மெரீனா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கண்ணகி சிலையிலிருந்து காந்தி சிலை நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற பைக்குகளை ஓவர் டேக் செய்து முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பார்மில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.

காரில் இருந்த திருநங்கை விமலா உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுக்கள் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருநங்கை விமலாவுக்கு தலையில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.