தமிழ்நாடு

ஆணவக்கொலைகள் சுதந்திரம் வரும் முன்பு இருந்தே நடக்கிறது- கமல்ஹாசன்

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி

 ஆணவக்கொலைகள் சுதந்திரம் வரும் முன்பு இருந்தே நடக்கிறது- கமல்ஹாசன்
நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட கவின் மற்றும் நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்துகொண்டு விட்டு சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வெளியில் இருந்து கூர்மையாக எல்லாரும் பார்த்துக்கொண்டு இருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது.

சமுதாய அமைப்பை மாற்றவேண்டும்

என்னுடைய முனைப்பு நாடு முதல் தமிழ்நாடு. இது தான் என்னுடைய போக்கஸ். இதற்காக தான் போய் இருக்கிறேன். முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என நினைக்கிறேன். அங்கே என்ன பேசுகிறேன் என்பதை இங்கு சொல்லக்கூடாது. பேச ஆரம்பித்த பின் கேள்விகள் நிறைய வரும்.

ஆணவக்கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்றவேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும்” என தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

முன்னதாக நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன், நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.