தமிழ்நாடு

விஜய் தனக்கு தம்பியா? எதிரியா? – சீமான் சொன்ன பதில்

விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள்;அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய் தனக்கு தம்பியா? எதிரியா? – சீமான் சொன்ன பதில்
தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “இந்தியாவில் நிறைய மாறுதல்கள் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது.

புதிய மசோதா வரவேற்கத்தக்கது

காசு கொடுத்து வாக்கு வாங்கும் முறை உள்ளது. ஜனநாயகம் வெற்று வார்த்தை ஆகிவிடக் கூடாது. பணத்தை கொடுத்து வாக்கு வாங்கிகொள்ளக் கூடாது. இதனால் மக்களுக்கான சேவை செத்து போய்விடும். வாக்கு வாங்கும் குற்றம் ஒராண்டு சிறையென எழுதி வைப்பதே தவிர நடவடிக்கை எடுப்பதில்லை. வாக்குக்குக் காசு கொடுக்கும் வேட்பாளர் 10 ஆண்டு தேர்தலில் நிற்கத் தடை என்று கொண்டு வந்தால் அந்த முறை ஒழியும்.

மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர் குற்றச்செயலில் ஈடுப்பட்டவரை தகுதி நீக்கம் செய்வது ஏற்புடையது தானே. அப்போது தான் ஒழுங்கம் இருக்கும். இல்லை என்றால் ஊழல் செய்வது, லஞ்சம் பெறுவது, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது. நாடே குற்ற சமூகமாகத் தான் போகும். நீதிமன்றம், காவல்துறை, வழக்கறிஞர்கள் மதிப்பவராக இருக்கிறார்கள். சிறைச்சாலைகள் பெரிதாகக் கட்டப்படுகிறது என்றால் சமூகம் குற்ற சமூகமாக வளர்ந்து வருகிறது என்று அர்த்தம். சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் சட்டத்தைப் போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இருப்பது தான் பிரச்சனை.

விஜய் எதிரியா?

எல்லாரும் தான் மாநாடு நடத்துகின்றனர். த.வெ.க மாநாட்டிற்கு பேனர்கள் வைத்தபின் அகற்ற சொல்கிறார்கள். எங்களை எல்லாம் வைக்கவிடாமல் தடுக்கிறார்கள். நெருக்கடிகளைச் சமாளித்துதான் வர வேண்டும். அதை எல்லாம் தாண்டிதான் வந்துள்ளோம்.தவெக முடிவு செய்து மாநாடு நடத்துகின்றனர். தம்பி என்ன செய்கிறார் என்பதை பார்த்துதான் கருத்து சொல்ல முடியும். மக்களுக்கு முன்னாடி என்ன கோட்பாட்டை வைத்து அரசியலில் நகர போகிறார் என்பதை பார்த்துத் தான் பேச முடியும். மாநாடு நடத்துவதால் கருத்து சொல்ல முடியாது.

தம்பியா, எதிரியா என்பதை செயல்பாடுகளை வைத்துத் தான். மீண்டும் திராவிடம் அதே கோட்பாடு, லட்சியம். திமுகவை ஒழிப்பதே ஒருவருக்கு லட்சியமாக உள்ளது. என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். கட்சிகளுக்கு மாற்றமாக நான் வருகிறேன். அரசியல் மாற்றத்திற்கு நிற்கிறேன். அடிப்படையை மாற்ற நினைக்கிறேன்.


எனக்கு பின்னால் தம்பி, தங்கைகள்

மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆர். ஏன் வருகிறார்கள். இதை முதலில் வைத்து இருக்க வேண்டும். 67, 77 வந்தார்கள் அது மாதிரி வருவோம் என்று சொல்ல வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர் ஒவ்வொரு கட்சியின் தோற்றுவித்தவர்கள். 60 ஆண்டுகளாக இந்த 2 தலைவர்களின் அரசியல் தான் இருக்கிறது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி படம் வருமா? நேரத்திற்கு ஏற்பச் செய்து கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல. விஜய்யின் ரசிகர்கள் எனக்குத் தம்பி, தங்கைகளாக உள்ளனர்.

எல்லாருக்கும் போராடி வருகிறேன். சரியான அரசியல் பாதை காட்டி சொல்ல வேண்டியது முன்னாடி நிற்கும் நம்முடைய கடமை. தத்துவத்தை முன் வைத்து நகர வேண்டும். ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் அதில் உறுதியாக நின்று செய்ய வேண்டும். திரும்பி இதே அரசியல் சாரத்தை எடுத்துக் கொண்டு வருவதற்கு அரசியல் தேவைப்படவில்லை. ஏற்கனவே அவர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரசை தான் விமர்சிக்க வேண்டும்

அரசியல் செயல்பாட்டில் எது சரி இல்லை என்று சொல்ல வேண்டும். பாஜக பாசிசம் என்று எது என்று சொல்ல வேண்டும். பைத்தியக்காரன் கூடச் சரி இல்லை என்று கூறுவான். இந்தப் பாதை சரியில்லை இந்தப் பாதை சரி என்று தலைமை சொல்ல வேண்டும். பாதை சரி இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். எது சரியான பாதை என்று சொல்ல வேண்டும். வாரிசு அரசியலை எதிர்க்கிறீர்கள். எதனால் மன்னராட்சி என்று சொல்ல வேண்டும். அப்படி என்றால் முதலில் காங்கிரசை பற்றிப் பேச வேண்டும். ஏன் பேசவில்லை.

நேர்மையாகப் பேச வேண்டும். யார் செய்தாலும் தவறு தான். நெற்றி கண்னே திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையில் வந்துவிட்டு அப்படி பேசக் கூடாது. ஒரு குடும்பத்தில் பிறந்தாலே பதவி என்றால் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும். ஊழலுக்காகச் சிறைக்கு போன கட்சி பற்றியும் பேச வேண்டும். ஒரு பக்கம் மயில் இறகுகால் தடவது, மறுபக்கம் கட்டையால் அடிப்பது என்றால் வழிகாட்டுதலாக இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.