தமிழ்நாடு

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?
திருமணம் செய்து மோசடி செய்ததாக நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார்
நடிகரும், சமையல் கலைஞருமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். டிவி செலிபிரிட்டியான இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி புகார் அளித்தார்.

திருமண மோசடி புகார்

ஏற்கெனவே திருமணமான இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி தன்னோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் தந்தை என்றும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர். ஆனால் ஜாய் அளித்த புகாரில் விசாரணை தொடங்குவதில் தாமதமாவதாக அவரே குற்றம்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

ஜாய் கிரிசில்டா வாக்குமூலம்

இந்தநிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா கடந்த 22ஆம் தேதி ஆஜரானார். துணை ஆணையர் வனிதா தலைமையிலான மகளிர் போலீசார் காலை 11 மணி முதல் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார். ஜாய் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். நாளை 26ஆம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆஜராக அவகாசம்?

ஜாய் கிரிசல்டா அளித்துள்ள வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜூடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை விசாரணை நடைபெற உள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிவிட்டு புறப்பட்டு சென்றார். மேலும் நாளை விசாரணைக்கு ஆஜராவதில் அவகாசம் கேட்பதற்காக துணை ஆணையர் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.