தமிழ்நாடு

"மக்கள் ஸ்லோ பாய்சனால் கொல்லப்படுகிறார்கள்" - ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள்குறித்து அன்புமணி ஆவேசம்!

குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


மக்கள் ஸ்லோ பாய்சனால் கொல்லப்படுகிறார்கள் - ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள்குறித்து அன்புமணி ஆவேசம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குவிந்துள்ள குரோமியம் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டைக்குச் சென்ற அவர், அங்கு 36 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருக்கும் குரோமியம் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்குறித்துக் கேட்டறிந்தார்.

குவிந்துள்ள குரோமியக் கழிவுகள்:

1989-ல் மூடப்பட்ட குரோமியம் தயாரிப்பு நிறுவனத்தின் லட்சக்கணக்கான டன் கழிவுகள் 36 ஆண்டுகளாக அப்பகுதியில் அப்படியே உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். இந்தக் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து, அப்பகுதி மக்களை மெதுவாக விஷம் வைத்துக் கொல்லும் 'ஸ்லோ பாய்சன்' போலச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

புற்றுநோய் பாதிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், குரோமியம் கலந்த நிலத்தடி நீர்தான் என்று அவர் சுட்டிக்காட்டினார். அனுமதிக்கப்பட்ட குரோமியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 0.05% மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், ராணிப்பேட்டையில் உள்ள சில பகுதிகளில் ஒரு லிட்டர் குடிநீரில் 277 மில்லிகிராம் அளவுக்குக் குரோமியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமைச்சருக்குக் கண்டனம்:

ராணிப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான காந்தி இந்தக் கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அன்புமணி கடுமையாக விமர்சித்தார். "இப்பகுதி மக்களைப் படிப்படியாகக் கொலை செய்கிறார்" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குரோமியம் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், தமிழக அரசு அதனைச் செயல்படுத்த மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கழிவுகளை அகற்ற சுமார் 700 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலாற்றின் பாதுகாப்பிலும் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் பாலாற்றில் கலப்பதைத் தடுக்க பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவித பயனும் இல்லை என்றார்.

குரோமியம் கழிவுகளை அகற்ற ஒரு வாரக் காலத்திற்குள் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். திமுக அரசு மக்களைக் கொலை செய்து கொண்டிருப்பதால், ஆட்சி செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என்றும் கூறினார்.