தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்- ஜோதிமணி எம்.பி
கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதி மணி
கரூர் மக்களவைத்தொகுதி எம்.பி.,ஜோதிமணி இரண்டாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ஓராண்டு செயல்பாட்டு அறிக்கை வெளியீட்டு விழா வேடசந்தூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட கரூர் எம்.பி., ஜோதிமணி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து ஓராண்டு செயல்பாடு அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.

96 கோரிக்கைகள் வைத்தேன்

அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “12 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் 5 அரசு உயர் அதிகாரிகளை தான் சந்தித்து 96 கோரிக்கைகளை வைத்ததாகவும், அதில் 13 ரயில் சேவைகள் மற்றும் மேம்பாலங்கள், 10 தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்கள், கரூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பன உட்பட 29 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிகப்படியாக இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னோடியாக 57% நிதியை கல்விக்கு மட்டும் தான் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக, பாமகவுக்கு கடைசி தேர்தல்

அதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பிய போது, தமிழ்நாட்டில் ஜெயிப்பதற்காக பாஜக கட்சியினர் ஏதாவது செய்து விட முடியாதா என்று எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அமலாக்கத்துறையில் ஆரம்பித்து கூட்டணி கட்சிகளின் ஒரு கையை உடைக்கும் வேலை வரைக்கும் எல்லாமே செய்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக எப்போதுமே தனது கூட்டணி கட்சிகளை கபளீகரம் செய்து விடுவார்கள். அவர்கள் எந்த ஒரு மாநிலத்திலும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால், அந்தத் தேர்தல் தான் அந்த கூட்டணி கட்சிக்கு இறுதித் தேர்தலாக இருக்கும். இதுதான் வரலாறு.அது பா.ம.க-வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க-வாக இருந்தாலும் சரி, அவர்கள் தனிப்பட்ட முறையில் இறுதியாக சந்திக்கும் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.