பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த கொலை தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் திருவேங்கடம், சீசிங்ராஜா ஆகியோர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.
ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவும், ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரம் தொடர்பாகவும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், 4ஆயிரத்து 892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது ஏன்? கொலையை அரங்கேற்றியது எவ்வாறு என்ற முழு விவரமும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.