செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதிக்கு உட்பட்டது நெடுமரம் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இம்மக்களின் பிரதான தொழில் விவசாயமும், கூலிவேலையும்தான். உடல் உழைப்பு தொழிலாளர்களான இம்மக்களுக்கு சமீப காலமாக அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்பட, மருத்துவமனைக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
அப்படி மருத்துவமனைக்கு சென்று வருபவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரகக் கோளாறு என பரிசோதனை முடிவு கிடைக்க பகீர் அடித்துக் கிடக்கிறார்கள்.
இதையடுத்து சிறுநீரகக் கோளாறுக்காக 30க்கும் மேற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கிராம மக்கள் குடிக்கும் தண்ணீர் குறித்து சந்தேகம் கிளப்ப, கிராமத்தினரும் குடிநீரை சென்னையில் உள்ள ஒரு ஆய்வு மையத்தில் கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் அருந்தும் தண்ணீரில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதாகவும், இது குடிப்பதற்கு உகந்தது அல்ல என்பதும் தெரிய வர அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இந்த தண்ணீரைத்தான் கிராமமே 5 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தி வருவதால், இன்னும் பலருக்கும், சிறுநீரக கற்களும், சிறுநீரக கோளாறும் கண்டிப்பாக இருக்கும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் அப்பகுதியினர்.
நெடுமரம் கிராமத்தில் குடிதண்ணீர் கிணறு ஏரியில் அமைந்துள்ளது. அந்த நீரும் பச்சை நிறத்தில் பாசிபிடித்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.
தங்களுக்கு குடிப்பதற்கு நல்ல தண்ணீர் வேண்டும் என்று பலமுறை கிராமசபை கூட்டத்திலும், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், தொடர்புடைய அதிகாரிகள் என பலரிடமும் மனு அளித்தும், எந்த பயனும் இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள் நெடுமரம் கிராம மக்கள். நாங்கள்தான் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறோம், வளரும் தலைமுறையாவது, நோயின்றி வாழ நல்லகுடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.