பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டனர். அரையிறுதிப் போட்டியில் இருவரும் மோதிய நிலையில், துளசிமதி முருகேசன் 23-க்கு 21, 21-க்கு 17 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்திற்கான சுற்றுக்கு முன்னேறினார்.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக வீராங்கனை துளசிமதி, சீன வீராங்கனையை எதிர்கொண்டார். தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21-க்கு 17, 21-க்கு 10 என்ற செட் கணக்கில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார்.
இதேபோல், அரையிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடினார். டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்ட அவர், தனது அசத்தலான திறமையால், 21-க்கு 12, 21-க்கு 8 என்ற நேர் செட் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.