வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்னைகளை கவனித்து வருவதாக தெரிவித்தார். மழைக்காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்ற 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடப்படாமல் இருந்தால், பொதுமக்கள் அதனை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.