அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதன் படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கோவையில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் GeakMinds நிறுவனத்தின் ஐடி மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மூதலீட்டில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Ohmium நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சென்னை தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட AI-இயக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க Applied Materials நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரையில் ரூபாய் 50 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க Infinx நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதே போல், சென்னை செம்மஞ்சேரியில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் Paypal நிறுவனத்தின் AI மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவரை மொத்தமாக சுமார் ஆயிரத்து 600 கோடி முதலீட்டில் ஐந்தாயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.