உலகம்

இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு 25% வரி விதிப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
25% tariff on Indian goods.. Trump's announcement
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்திருந்தது. பின்னர், இந்த வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்து, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. டிரம்ப் விதித்த கெடு நாளையுடன் (ஜூலை 31) முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில், “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்களின் வரிகள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன. அவை உலகிலேயே மிகவும் அதிகம். மேலும், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான, அருவருப்பான பணமற்ற வர்த்தகத் தடைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவத்திற்கான தளவாடங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்தே வாங்கி வந்துள்ளனர். உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்தும் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவருமே விரும்பும் இந்த நேரத்தில், அவர்கள் (இந்தியா) சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எரிசக்தியை (கச்சா எண்ணெய்) வாங்குகிறார்கள். இவை எதுவும் நல்லதல்ல.

எனவே, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும். அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிபர் டிரம்ப் தனது ஸ்காட்லாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்காவுக்கு விமானத்தில் திரும்பியபோது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 20 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரியை இந்தியா எதிர்கொள்ளக்கூடும்.” என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.