உலகம்

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?
Canadian politician Anita Anand has been sworn in as Canadas new foreign minister
அமெரிக்க அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, கனடாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது என்றே சொல்லலாம். கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவேன் என குறிப்பிட்டதோடு அதிகப்பட்ச பரஸ்பர வரி விதிப்பு போன்ற பல்வேறு அழுத்தங்களை கனடாவிற்கு கொடுத்து வருகிறார் டிரம்ப். இதனாலேயே, கனடா-அமெரிக்கா இடையேயான உறவு நாளுக்கு நாள் பதற்றமான சூழ்நிலையில் தான் நகர்கிறது.

இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று, கனடிய பிரதமர் மார்க் கார்னி 28 அமைச்சர்கள் மற்றும் 10 வெளியுறவுச் செயலாளர்களை உள்ளடக்கிய 38 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை குழுவினை அறிமுகம் செய்து வைத்தார். இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்துக்கு தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியத்துறையாக கருதப்படும் வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பகவத் கீதையுடன் பதவியேற்பு:

கனடாவின் லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினரான 58 வயதான அரசியல்வாதி அனிதா ஆனந்த், பகவத் கீதையின் மீது கைவைத்து வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். முந்தைய காலத்தில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற போதும் இதைப்போல் பகவத் கீதையின் மீது கை வைத்து பதவியேற்பு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராக பதவியேற்ற அனிதா ஆனந்த் X-தளத்தில், "கனடாவின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பாதுகாப்பான, நியாயமான உலகத்தை உருவாக்கவும், கனடியர்களுக்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


2025-ல் நடைப்பெற்ற தேர்தலில் அனிதா ஆனந்த் ஓக்வில் கிழக்குப் பகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019 முதல் 2025 இடையேயான காலத்தில் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர், தேசிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் மற்றும் கருவூல வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய இலாக்காக்களை அனிதா ஆனந்த் திறம்பட வகித்துள்ளார்.

அனிதா ஆனந்த் குடும்பப்பின்னணி:

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு குடியேறிய சரோஜ் டி ராம் மற்றும் எஸ்.வி. ஆனந்த் ஆகியோருக்கு மே 20, 1967 அன்று மகளாக பிறந்தார் அனிதா ஆனந்த். இவரின் பெற்றோர்கள் 1960-களின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர். அவரது தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர், அவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்திற்கு கீதா மற்றும் சோனியா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

1985 ஆம் ஆண்டு, தனது 18 வது வயதில் அனிதா ஆனந்த் ஒன்ராறியோவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் அரசியல் அறிவியலில் கல்விப் பட்டம் பெற்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து டல்ஹவுசி பல்கலைக்கழகம் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முறையே இளங்கலை மற்றும் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பினைத் தொடர்ந்து சட்டத்துறை, கற்பித்தல் மற்றும் பொது சேவையில் ஈடுபடுதல் என் தன் ஆரம்ப கால வாழ்வினை வாழ்ந்தார்.