இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் eSafety ஆணையர் ஜூலி இன்மேன் கிராண்ட் கடந்த மாதம் YouTube-தளத்தையும் தடையில் சேர்க்க பரிந்துரைத்தார். 10 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பார்க்க யூடியூப் தளம் தூண்டுவதாக ஜூலி இன்மேன் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஒரு தரப்பினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று யூடியூப் தளம் சமூக ஊடகங்களின் பிரிவில் வராது என தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், அதனை ஆஸ்திரேலியா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறார்களுக்கான சமூக ஊடகங்களுக்கான தடைப்பட்டியலில் யூடியூப் தளத்தை தற்போது இணைத்துள்ளது.
Protecting kids online means taking on some tough problems, so we’re banning social media accounts for under-16s.
— Anthony Albanese (@AlboMP) July 30, 2025
The way these platforms are built can harm children while they’re still finding their own way.
No one knows this better than Mia, Rob and Emma, who have suffered… pic.twitter.com/Nia5EKZsaD
ஆஸ்திரேலியா அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து, யூடியூப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் "யூடியூப் என்பது மற்ற சமூக ஊடகங்களைப் போல் அல்ல. கல்வி சார்ந்த வீடியோக்களும் அதிகம் பதிவேற்றப்படுகிறது. தடை உத்தரவு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம். மேற்கொண்டு எங்கள் தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
16 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்போதும் YouTube உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும் (பெற்றோர்களின் கட்டுப்பாட்டில்). ஆனால் அவர்களால் கணக்கு தொடங்க முடியாது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களால் மட்டுமே யூடியூப் வீடியோக்களில் கருத்து தெரிவிக்கவோ, வீடியோ பதிவேற்றவோ முடியும்.
இந்த ஆண்டு இறுதியில் அமலுக்கு வரவிருக்கும் இந்தத் தடையின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் கணக்குகளை செயலிழக்கச் செய்ய வேண்டும், புதிய கணக்குகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் கூறுகையில், ”குழந்தைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வழிமுறைகளுக்கு இடமளிக்க முடியாது. நாங்கள் கடலை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் சுறாக்களை நாங்கள் கண்காணிக்க முடியும். அதனால்தான் ஆஸ்திரேலிய குழந்தைகளின் நல்வாழ்வுக்காக இந்த முடிவினை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்டுள்ள தடையின் கீழ், தொழில்நுட்ப நிறுவனங்கள் வயது வரம்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அவர்களுக்கு A$50 மில்லியன் ($32.5 மில்லியன்;£25.7 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.