உலகம்

இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல்.. அயர்லாந்தில் சிறுவர்கள் அட்டூழியம்!

அயர்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல்.. அயர்லாந்தில் சிறுவர்கள் அட்டூழியம்!
Racist attack on Indian-origin girl
அயர்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தச் சிறுமியை, சில சிறுவர்கள் "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்" என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

சிறுமி மீது இனவெறி தாக்குதல்

அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டு நகரில் வசிக்கும் நியா நவீன் என்ற அந்தச் சிறுமி, நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்கள் குழு ஒன்று, அவளை "அசுத்தமானவள்" என்று கூறி, சைக்கிளால் அவளது அந்தரங்கப் பகுதிகளில் தாக்கி, முகத்தில் குத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அனுபா அச்சுதன் வேதனையுடன் கூறுகையில், "இந்தச் சம்பவம் நடக்கும்போது, நான் உள்ளே இருந்தேன். சிறிது நேரத்தில் எனது மகள் அழுதுகொண்டே உள்ளே வந்தாள். அவளால் பேசக்கூட முடியவில்லை. தற்போது என் மகள் படுக்கையில் அழுது கொண்டிருக்கிறாள். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

தாயின் கோரிக்கை

அனுபா, சமீபத்தில் தான் அயர்லாந்து குடியுரிமை பெற்றுள்ளார். "நான் ஒரு செவிலியர். என் குழந்தைகள் இங்கேதான் பிறந்தார்கள். ஆனாலும், எங்களைப் பார்த்து அசுத்தமானவர்கள் என்று சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து நான் போலீஸில் புகார் அளித்துள்ளேன். ஆனால், அந்தச் சிறுவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

இதேபோல் அயர்லாந்தில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.