உலகம்

செல்பி மரணங்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

செல்பி எடுப்பதற்கு மிக ஆபத்தான நாடிகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.

செல்பி மரணங்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
selfie-related casualties (AI Generated image)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ‘தி பார்பர்’ என்ற நிறுவனம், கடந்த 2014 மார்ச் முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் பதிவான அனைத்துச் சம்பவங்களிலும் 42.1 சதவீதம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆபத்தான நாடுகளின் பட்டியல்

இந்த ஆய்வு முடிவுகளின்படி, செல்பி எடுப்பதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சமூக ஊடக கலாச்சாரம், அதிக மக்கள் தொகை, பாறைகள் அல்லது ரயில் தண்டவாளங்கள் போன்ற ஆபத்தான இடங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல காரணிகள் இந்த விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

செல்பி தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பதிவான நாடுகளின் பட்டியல்:

1) இந்தியா: 271 சம்பவங்கள் (214 உயிரிழப்புகள், 57 காயங்கள்)

2) அமெரிக்கா: 45 சம்பவங்கள் (37 உயிரிழப்புகள், 8 காயங்கள்)

3) ரஷ்யா: 19 சம்பவங்கள் (18 உயிரிழப்புகள், 1 காயம்)

4) பாகிஸ்தான்: 16 உயிரிழப்புகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

5) ஆஸ்திரேலியா: 15 சம்பவங்கள் (13 உயிரிழப்புகள், 2 காயங்கள்)

இவை தவிர, இந்தோனேசியா 14 உயிரிழப்புகள், கென்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் தலா 13 உயிரிழப்புகள் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

விபத்துகளுக்கான முக்கியக் காரணம்

ஆய்வின்படி, செல்பி தொடர்பான அனைத்து இறப்புகளிலும், சுமார் 46 சதவீதம் பேர் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து தவறி விழுந்ததால் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய ‘பார்பர் லா ஃபர்ம்’ நிறுவனர் கிரிஸ் பார்பர், “சமூக வலைத்தளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பலரின் உயிர்களைப் பறித்துள்ளது என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பாதுகாப்பான இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்தால் இதுபோன்ற விபத்துகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்க்க முடியும்” என்று எச்சரித்துள்ளார்.