உலகம்

சமூக வலைதளத் தடை: "குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்"- ஆஸ்திரேலியப் பிரதமர்!

உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை இன்று (டிசம்பர் 10) முதல் அமலுக்கு வருகிறது.

சமூக வலைதளத் தடை:
Australian Prime Minister Anthony Albanese
உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை இன்று (டிசம்பர் 10) முதல் முழுவீச்சில் அமலுக்கு வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த முடிவின் மூலம் "குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தடைக்கான காரணம் மற்றும் அமல்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் சிறுவர்-சிறுமியர் தவறான பாதைக்கு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இந்தத் தடை இன்று, டிசம்பர் 10-ஆம் தேதி முதல் முழுவீச்சில் அமலாகவுள்ளது.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ்-ன் வீடியோச் செய்தி

இது தொடர்பாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியபோது, 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குச் சமூக வலைதளம் பயன்படுத்தத் தடை விதித்த, உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது என்று குறிப்பிட்டார். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அமைதியை உருவாக்கும் என்றும், இது அவர்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா முழுவதும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் இல்லாமல் தங்கள் நாளைச் சற்று வித்தியாசமாகத் தொடங்குகிறார்கள் என்றும், இது ஒரு பெரிய மாற்றம், உண்மையில் முக்கியமானது என்றும் அவர் கூறினார். இன்றைய மாற்றம் உங்கள் குழந்தைகளைச் சமூக வலைதளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று தெரிவித்த பிரதமர், ஆஸ்திரேலியக் குடும்பங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமையையும், பெற்றோர்கள் அதிக மன அமைதியைப் பெறுவதையும் வலியுறுத்தும் நாள் இது, இன்றைய நாள் பெருமை வாய்ந்தது என்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.