உலகம்

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை.. நிலநடுக்கம் காரணமா?

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை.. நிலநடுக்கம் காரணமா?
Volcano erupts after 600 years
ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் தான் இந்த எரிமலை வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிப்பு

"இது 600 ஆண்டுகளில் கிராஷென்னினிகோவ் எரிமலையின் முதல்வெடிப்பாகும்" என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராஷென்னினிகோவ் எரிமலை கடைசியாக 1463ஆம் ஆண்டில் வெடித்ததாக கருதப்படுகிறது. மேலும், அதன் பிறகு கிராஷென்னினிகோவில் எந்த வெடிப்பும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்துடன் தொடர்பு

கடந்த ஜூலை 30 ஆம் தேதி ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, பிரெஞ்சு பாலினேசியா மற்றும் சிலி போன்ற பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடிக்கத்துக்கும் கிராஷென்னினிகோவ் எரிமலை வெடிப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பாதிப்பும், எச்சரிக்கையும்

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, 6,000 மீட்டர் (3.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியுள்ளது. இந்த சாம்பல் மேகம் கிழக்கு நோக்கி, பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சாம்பல் மேகத்தால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், விமானங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதால், அந்தப் பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange aviation alert ) விடுக்கப்பட்டுள்ளது.