சினிமா

ஊழல் செய்தவர்களை தேடித் தேடி தவெகவில் சேர்க்கிறார்கள்!' - தவெக மீது இயக்குநர் அமீர் விமர்சனம் !

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர்.

ஊழல் செய்தவர்களை தேடித் தேடி தவெகவில் சேர்க்கிறார்கள்!' - தவெக மீது இயக்குநர் அமீர் விமர்சனம் !
சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்களான வீரமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் தவெகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் அமீர், "ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக நிர்வாகிகளை தவெகவில் சேர்த்துக் கொள்வதையே ஊழல் ஒழிப்பு என நினைக்கிறார்கள். 'ஊழல் செய்த யாரையும் விட மாட்டோம்; எல்லோரையும் தேடித் தேடி எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்' என்ற மனநிலையில்தான் தவெக செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்று கடுமையாக விமர்சித்தார்.

தவெக அரசுக்கு எதிராக திரையுலகில் இருந்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க பலர் தயக்கம் காட்டி வரும் நிலையில், அமீர் நேரடியாக விமர்சனம் முன்வைத்திருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அதேநேரத்தில், அமீரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த கருத்துகள் வெளியாகி வருகின்றன. தவெக தலைமையிலிருந்து இதற்கு என்ன பதில் வரும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.