இந்தியா

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. போராட்டத்தை வாபஸ் பெற்றது சிஜேபி!

நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சு ஜனதா கட்சி.

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு.. போராட்டத்தை வாபஸ் பெற்றது சிஜேபி!
CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாகக் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அனைவரும் இல்லம் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இணைந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் நடத்திய கூட்டச் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அப்போது பேசிய சௌரவ் தாஸ், தங்களின் முக்கியக் கோரிக்கையான கல்வி அமைச்சரின் ராஜினாமாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதால், நல்நம்பிக்கையின் அடிப்படையில் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா தவிர்த்து, பிற கோரிக்கைகள் குறித்தும் அரசு உறுதியளித்துள்ளதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், வருங்காலத்தில் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, விதிமுறைகளின்படி அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

"எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வீட்டிற்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சௌரவ் தாஸ் தெரிவித்தார்.