அரசியல்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி!

விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி!
DMK MLA
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனிடம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், அவர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும், அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சூழலில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுமதி, ஜாமீன் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறையின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.