அரசியல்

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!
Edappadi Palaniswami
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களைத் திருடும் முதலமைச்சர் விஜய்தான் உண்மையான களவாணி. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அவர் அல்வா கொடுத்துவிட்டார். நான்கு கால்கள் இருந்தால்தான் நாற்காலி நிலையாக நிற்கும்; ஆனால் விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் பிற கட்சிகளிடம் இருந்து இரவல் வாங்கப்பட்ட கால் ஆகும். தமிழ்நாட்டில் உண்மையில் ஆட்சி நடக்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "முதலமைச்சர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசாமல் வெறும் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே பேசி வருகிறார். முதலமைச்சர் அந்தஸ்துக்கே அவர் இன்னும் வரவில்லை. திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ், சுய லாபத்திற்காகத் தவெக அரசில் இணைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான ஒரு இயக்கம்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

தவெக ஐடி விங் கொடுத்த பதிலடி

எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்குத் தவெக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. அதில், "தங்கள் கட்சி நடக்கிறதா அல்லது தாங்கள் கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாத ஒருவர், மாநிலத்தில் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. திமுகவுடன் சேர்ந்து கூட்டுக் களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்துத் திட்டம் போட்டவர், இன்று மனசாட்சியுடன் நடக்கும் மக்கள் ஆட்சியை இரவல் ஆட்சி என்று கூறுவது அடக்க முடியாத சிரிப்பையே வரவழைக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.

மேலும், "கொடநாடு கொலை வழக்கு பற்றிப் பேசினாலே நடுங்குபவர்கள் எல்லாம் தவெக அரசு பற்றிக் குறை கூறுவது குபீர் சிரிப்பு காமெடி. தன் சொந்தக் கட்சியே பீஸ் பீஸாகித் துண்டு துண்டாக உடைந்து வருவது தெரியாமல், வெளியில் வந்து காமெடியாகப் பேட்டி தருவதை விடுத்து, முதலில் தனது கட்சியைக் காப்பாற்றும் வேலையை அவர் பார்க்கட்டும்" என்றும் தவெக ஐடி விங் மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளது.