அரசியல்

காங்கிரசுக்கு ராஜ்ய சபா சீட்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை, காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகத் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

காங்கிரசுக்கு ராஜ்ய சபா சீட்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Rajya Sabha seat for Congress
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர் இடத்தை, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தவெக வசம் உள்ள இந்த ஒரேயொரு சீட்டை அக்கட்சியே தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது காங்கிரசுக்குக் கிடைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்தபோது, 5 இடங்களில் வென்ற காங்கிரஸ் அதற்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

பிரவீன் சக்கரவர்த்தி பெயர் பரிந்துரை?

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்தபோது தொகுதிப் பங்கீட்டின் மூலம் காங்கிரசுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டு, அதில் கிறிஸ்டோபர் திலக் எம்பியாகப் பதவியேற்றுக்கொண்டார். தற்போது தவெக மூலமாக காங்கிரசுக்கு இரண்டாவது சீட் கிடைத்துள்ளது. இந்த புதிய இடத்திற்குப் பிரவீன் சக்கரவர்த்தி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மாநிலங்களவையில் காங்கிரசின் ஒட்டுமொத்த பலம் 30 ஆக உயர்கிறது.

தமிழகத்தில் பலப்படும் காங்கிரஸ்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது தவெக கூட்டணியிலும் தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 9 மக்களவை எம்பிக்கள், 5 எம்எல்ஏக்கள், 2 அமைச்சர்கள், 2 மாநிலங்களவை எம்பிக்கள் எனத் தமிழக அரசியலில் காங்கிரசின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.