விளையாட்டு

இருமுறை Hit Wicket.. மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான சாய் சுதர்சன்!

ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்ஷன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இருமுறை Hit Wicket.. மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான சாய் சுதர்சன்!
Sai Sudharsan
ஐ.பி.எல். 2026 தொடரின் முதலாவது தகுதிச் சுற்று (Qualifier 1) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி) அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, கேப்டன் ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இரண்டு முறை கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பிய படிதார், 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணி கடைசி 6 ஓவர்களில் மட்டும் 114 ரன்களைக் குவித்தது. முன்னதாக விராட் கோலி 43 ரன்களும், தேவ்தத் படிக்கல் 30 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் தந்தனர்.

சாய் சுதர்சனின் மோசமான சாதனை

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அந்த அணியின் ராகுல் திவேதியா அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். கேப்டன் சுப்மன் கில் (2 ரன்கள்), ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, துவக்க வீரர் சாய் சுதர்சன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேக்கப் டஃபி வீசிய பந்தில் அடிக்க முயன்றார். அப்போது அவரது கை நழுவிச் சென்ற பேட், தரையில் பட்டு ஸ்டம்புகளைத் தாக்கியதால் அவர் 'ஹிட் விக்கெட்' முறையில் அவுட்டானார்.

இதற்கு முன்னதாக, 2022 ஐபிஎல் சீசனில் சாய் சுதர்ஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதே போல் ஹிட் விக்கெட் ஆனார். அப்போது பவுலர் பொலார்ட் பவுன்சரை வீசினார். புல் ஷாட் ஆட முயன்ற சாய் சுதர்ஷனின் பேட் கை நழுவி ஸ்டெம்பில் பட்டு ஆட்டமிழந்தார் .இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற வேண்டாத சாதனையை அவர் படைத்தார்.

ஆர்சிபி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி

இந்தத் துல்லியமான வெற்றியின் மூலம் ஆர்.சி.பி அணி தனது 5-வது ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இறுதிப்போட்டிக்குச் செல்ல இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி, வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் மோதவுள்ளது.