தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து மற்றொரு தலித் பிரமுகர் கொலை! பதிலளிக்குமா அரசு?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசி விவாதித்த அடுத்தநாளே கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலித் பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங்கை  தொடர்ந்து மற்றொரு தலித் பிரமுகர் கொலை! பதிலளிக்குமா அரசு?
VCK Functionary Anbazhagan Killed in Chennai
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசி விவாதித்த அடுத்தநாளே கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலித் பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரம் அருகே பட்டப்பகலில் விசிக தொண்டரணி அமைப்பாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கர கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தொண்டரணி அமைப்பாளராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று பட்டப்பகலில் மர்ம நபர்கள் சிலர் அன்பழகனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்:

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகள் எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்விரோதம் காரணமா?

கொலை செய்யப்பட்ட அன்பழகன், ஏற்கனவே போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவான கொலையாளிகளுக்கு வலை:

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதால், திருநீர்மலை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன? இதில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? திட்டமிட்டு இந்த கொலை நடத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சங்கர் நகர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மற்றொரு பூகம்பத்தையும் எழுப்பியுள்ளது, சட்டமன்றத்தில் நேற்றைய தினம் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு குறித்து எதிர்கட்சியினரான திமுகவை நோக்கி கேள்விகளை எழுப்பினர். 

அப்படியிருக்கையில், மறுநாளே தவெகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளைய தின சட்டமன்றத்தில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்றும் திமுகவினரால் நிச்சயம் கேள்விகள் எழுப்பப்பட்டு சட்டமன்றத்தில் அமளிகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.