தமிழ்நாடு

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், கடந்த மே 27 ஆம் தேதி அரசு முறை பயணமாக டெல்லிக்கு சென்றிருந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க அப்பாயிண்மெண்ட் கேட்கப்பட்ட நிலையில், பிரதமரை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்பினார் விஜய். அமித்ஷா கடைசி நேரத்தில் விஜய்யின் அப்பாயிண்மெண்டை கான்செல் செய்தார். இதுகுறித்து விசாரித்தபோது, விஜய் அதிகாரிகளுடன் வரவில்லை, மாறாக நண்பர்களுடன் வந்திருந்தார் என்றும், அதனால் தான் விஜய்யை அமித்ஷா சந்திக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மோடியுடனான சந்திப்பும் வெறும் 10 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டதால், அப்செட்டில் இருந்த விஜய், டெல்லி சென்று கூட்டணிக் கட்சித் தலைவர் ராகுல்காந்தியைக் கூட சந்திக்காமல் சென்னை திரும்பினார். அதுமட்டுமல்ல, செய்தியாளர்களையும் சந்திக்காமல் விஜய் திரும்பியதும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெல்லி விஜயமே கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக டெல்லிக்கு செல்ல உள்ளார் முதலமைச்சர் விஜய்.

அதாவது, ஜூன் 11 ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார்.

இக்கூட்டம் முடிந்த கையோடு, பிரதமரை விஜய் சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேச உள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை சந்தித்த கையோடு, இந்தியா கூட்டணி தலைவர்களையும் டெல்லியில் விஜய் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுவது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியா கூட்டணி மீட்டிங்கை திமுக புறக்கணித்துள்ள நிலையில், இக்கூட்டணியில் இருந்து திமுக விலகவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இந்தியா கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்து தேசிய அளவில் புதிய கூட்டணியை திமுக உருவாக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகையச் சூழலில், ராகுல்காந்தி – விஜய் சந்திப்பு தேசிய அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

எனவே, இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் விஜய், யார் யாரை சந்திக்கபோகிறார்? விஜய்யின் டெல்லி விஜயத்தால் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்கள் என்னென்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.