உலகம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: அரசு அதிரடி உத்தரவு!

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: அரசு அதிரடி உத்தரவு!
Social Media Ban
மலேசியாவில் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு இன்று முதல் அதிரடித் தடை விதித்துள்ளது.

குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக மலேசிய அரசு இந்த புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்குக் கட்டாயமாக வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும், 16 வயதிற்குட்பட்டோர் புதிய கணக்குகள் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியானது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள முன்னணி சமூக வலைதள நிறுவனங்களுக்குப் பொருந்தும். அரசின் இந்த விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.24 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற சமூக வலைதளக் கட்டுப்பாடுகளைத் தங்களது நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளன. இவர்களைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், ஆந்திரப் பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கான இந்தச் சமூக வலைதளத் தடைகள் குறித்து மெட்டா நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் கிளாரா கோ தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "இத்தகைய முழுமையான சமூக வலைதளத் தடையானது, பதின்ம வயதினரை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாத, முறைப்படுத்தப்படாத ஆபத்தான இணையப் பக்கங்களை நோக்கித் தள்ளிவிடும்" என்று எச்சரித்துள்ளார்.