ஆன்மிகம்

தேர்வில் 100/100 மதிப்பெண்.. மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தேர்வில் 100/100 மதிப்பெண்.. மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!
AI Image
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ செல்வங்கள் பொதுத்தேர்வுகளை எழுத தொடங்கி இருக்கிறார். அதே போன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மாணவ செல்வங்கள் இறுதித்தேர்வை எழுத போகிறார்கள். தேர்வுகளை எழுத இருக்கும் மாணவசெல்வங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்ப்போம்.

விசாகம்

அமைதியும் ஆர்வத்துடன் கற்கும் குணமும் உள்ளவர் நீங்கள். குருதசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனி தசை வரை தொடரும். பலரால் பாராட்டப்பட்டாலும் அதனால் கர்வம் அடையாத குணம் உள்ளவர். அதேசமயம் அந்த அதீத நம்பிக்கையால், கடைசி நிமிடம் வரை எதையும் ஒத்திப் போடுவதும், பிறகு அவசர அவசரமாகச் செயல்படுவதுமே உங்கள் குறை என்பதை உணர்வது நல்லது.

எவருடனும் எளிதில் பழகாத மனப்பாங்கு உடைய நீங்கள் குறுகிய வட்டத்துக்குள் இருக்கவே ஆசைப்படுவதும் உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். புதிது புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதும், கிணற்றுத் தவளையாக இருப்பதைத் தவிர்ப்பதும் அவசியம். உணர்ந்து செயல்படுவது உத்தமம். அயல்நாட்டுக் கல்வி வாய்ப்பு வரும்போது தவிர்க்காமல் ஏற்பது நல்லது.

சுவாசப் பிரச்னை, ஒவ்வாமை, பற்களில் பாதிப்பு போன்றவற்றில் உடனடி சிகிச்சை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது, பக்கத்திலுள்ள மகானின் பிருந்தாவனம் சென்று வாருங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை மந்திராலயம் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். கல்விப்பருவம் முடிந்ததும், திருச்செந்தூர் சென்று ஆறுமுகனை அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை வளமையாகும்.

அனுஷம்

கவனமாகவும் முழுமையாக முயற்சித்தும் வெற்றியைப் பெறக்கூடியவர் நீங்கள். சனி தசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், புதன் தசை வரை தொடரும். படிப்பிலும் பிற விஷயங்களிலும் திட்டமிட்டுச் செயல்படுவதும், குறிப்பிட்ட நேரத்தில் செய்வதும் உங்கள் குணம். அதேசமயம், உங்கள் தீர்மானம் மட்டுமே சரியானது என்ற விடாப்பிடியான குணம் தவிர்ப்பது அவசியம்.

இந்த நட்சத்திரக் குழந்தைகளை பெற்றோர் பிறருடன் ஒப்பிட்டுக் குறைசொல்லிப் பேசாமலும், அதிகாரம் இல்லாமல் அன்பு காட்டியும் வளர்த்தால் இவர்கள், மாணவப் பருவத்தில் பல சாதனைகள் புரிவார்கள். எதிலும் நீங்களே முன் நிற்க வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் நீங்கள். உங்களைவிட அறிவில் குறைந்த மாணவர்களுக்கு கற்றுத்தரும் பழக்கத்தை மேற்கொண்டீர்களானால் நட்பும் ஜெயிக்கும்; நீங்களும் வெல்லலாம். உங்களுக்கு வெளிநாட்டுக்கல்வி வாய்ப்பு எளிதாகக் கைகூடும். காது, மூக்கு, தொண்டை, தோள்பட்டை வலி உபாதைகள் வரலாம். உடன் மருத்துவம் உத்தமம்.

வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்குப் போய் வாருங்கள். வருடத்திற்கு ஒருமுறை திருக்கொள்ளிக்காடு தலத்திற்குச் சென்று பொங்கு சனியை வணங்குங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், நாமக்கல் சென்று அனுமனை தூய மனதோடு துதித்து வாருங்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி துளிர்க்கும்.

கேட்டை

முயற்சிகளால் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காணக்கூடியவர் நீங்கள். புதன் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேது தசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர தசையிலும் தொடரலாம். இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிப்பதும், சட்டெனப் புரிந்துகொள்வதும் உங்கள் குணம். அதேசமயம் வீண் புகழ்ச்சிக்கு மயங்குவதால், அறிவே சிலசமயங்களில் அகந்தையாக மாறி வெற்றிக்குத் தடையாகிவிடும். தற்பெருமையும் தலைகனமும் தவிர்ப்பது முக்கியம்.

அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளில் ஈடுபடும்போது, உரிய நபர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்பதும், பெற்றோர் உதவியை மட்டுமே நாடுவதும் நல்லது. சிறுவயது முதலே குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதையும், ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

முதுகுத்தண்டுவடம் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கீழே விழுந்து அடிபடுதல் போன்ற பிரச்னைகள் வரலாம். உடன்சிகிச்சை அவசியம்.

புதன்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பெருமாளை வழிபடுங்கள். 3 ஆண்டுக்கு ஒருமுறை திருவெண்காடு திருத்தலம் சென்று இறைவனையும் புத பகவானையும் கும்பிட்டு வாருங்கள். மாணவப்பருவம் முடிந்ததும் ஸ்ரீரங்கம் சென்று பள்ளிகொண்ட பெருமாளை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.

மூலம்

இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர் நீங்கள். கேது தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர தசை வரை நீடிக்கும். புத்திசாலியான நீங்கள் அவசரம், அலட்சியத்தால் உங்கள் வெற்றிகளுக்கு நீங்களே தடையாக இருப்பீர்கள். எனவே முழு கவனத்துடன் செயல்பட்டால் பெரும் சாதனைகள் செய்யலாம். நட்பில் கவனம் இருக்கட்டும்.

வெளிநாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும். முயற்சிகளைத் தொடங்கும்முன் பக்கத்துக் கோயிலில் உள்ள துர்க்கையை வழிபடுவது சிறப்பான பலன் தரும்.

உங்களை உயர்த்திப் பலர் புகழும்போது மகிழும் நீங்கள், பிறரது தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அமைதியாகச் செயல்படுவது நல்லது. தினமும் சிறிதளவாவது உடற்பயிற்சி செய்வது மனப்பயிற்சியாக இருக்கும். நரம்பு உபாதை, ஒற்றைத்தலைவலி, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் எளிதாக உங்களைத் தாக்கலாம். அலட்சியமில்லாத சிகிச்சை அவசியம்.

செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். துர்க்கையை வழிபடுவதும் நல்லது. 3 வருடத்துக்கு ஒரு முறை பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவப் பருவத்தின் முடிவில் காளஹஸ்தி சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்க்கை உன்னதமாக அமையும்.

பூராடம்

விடா முயற்சியால் வெற்றியை அடையமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவர் நீங்கள். உங்களின் மாணவப்பருவம், சுக்ர தசையில் தொடங்கி, சூரிய தசை வரை இருக்கும். சிலருக்கு சந்திர தசை வரை தொடரலாம். எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு சட்டெனத் தீர்மானிப்பதைத் தவிர்த்து திட்டமிட்டுச் செயல்பட்டால் இந்த சாதனைகள் படைக்கலாம்.

உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும்போது, பெற்றோர் பெரியோர் ஆலோசனை கேட்பது நல்லது. கல்விக் கடனுக்கான முயற்சிகளை நேரடி கவனத்தோடு செய்வது பயன் தரும்.

இயல்பாகவே புத்திசாலியான நீங்கள், சட்டென உணர்ச்சி வசப்படுவதாலும், யோசிக்காமல் செயல்படுவதாலும் வாய்ப்புகளை இழப்பீர்கள். எனவே, தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வயிற்றில் பூச்சிகளால் தொல்லை, கழிவுப்பாதை உபாதை, தொற்றுநோய் பாதிப்புகளில் அலட்சியம் கூடாது.

புதன்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் இஷ்டதெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பள்ளி கொண்ட பெருமாளை தரிசியுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மனாப பெருமானை தரிசிப்பது சிறந்த பலன் தரும். மாணவப் பருவத்தின் இறுதியில், திருப்பதி சென்று ஓர் இரவு தங்குவதும், திருவேங்கடவனை தரிசிப்பதும், தித்திப்பான வாழ்வு அமைய உதவும்.