ஆன்மிகம்

இறந்த முன்னோர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாமா?

பிறந்த குழந்தைகளுக்கு, இறந்த தம் முன்னோர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது சரியா? என விளக்குகிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

இறந்த முன்னோர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாமா?
Should Children Be Named After Deceased Ancestors
குமுதம் ஆன்மிக வாசகர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு, கே.குமாரசிவாச்சாரியார் தொடர்ந்து பதில்கள் அளித்து வருகிறார். அந்த வகையில், மஞ்சக்குப்பத்தை சேர்ந்த மாலதி சுரேஷ், இறந்த முன்னோரின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு கே.குமாரசிவாச்சாரியார் அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு-

“பழங்காலங்களில் பரம்பரைப் பரம்பரையாக வந்தப் பழக்கமாக இந்த முறைப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் தாத்தாவோ பாட்டியோ வசதி படைத்தவராக செல்வந்தராக வாழ்ந்து மறைந்திருந்தால், தாத்தா பெயரை பேரனுக்கோ, பாட்டியின் பெயரை பேத்திக்கோ வைப்பார்கள். சில வீடுகளில் தாத்தவிடம் பிரியம் கொண்டு, பிள்ளைக்கு இப்படிப் பெயர் சூட்டப்படுவதில்லை. அவரைப்போல அதிர்ஷ்டத்தோடு பணக்காரராக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வைக்கப்படுகிறது.

ஆனால், முன்னோர் உணவுக்கே கஷ்டப்பட்டு இறந்திருந்தால், அவர்களுடைய பெயரையும் சூட்டமாட்டார்கள்; படத்தையும் வீட்டு ஹாலில் மாட்டி வைக்கமாட்டார்கள். கவனித்திருக்கிறீர்களா?

வேதம் படித்தவர்கள் முன்னோர் பெயரை ‘சர்மா’ என்று இணைத்து, வழித்தோன்றல் எனக் குறிப்பிடுவர். தமிழ் ஆர்வலர்களோ சங்க இலக்கிய கதாபாத்திரங்களில் அதிர்ஷ்டமாக விளங்கும்படியான பெயரை வைப்பர். கிராமத்து மக்கள், குலசாமிப் பெயரைச் சூட்டுவர்.

தற்காலத்தில் ஜோதிடர்கள் மூலமாக ‘நியூமராலஜி’ பெயர்களை ஆங்கில முறைப்படி வைத்துவிடும் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால், இறந்த முன்னோரின் பெயரை குழந்தைக்குச் சூட்டுவதைத் தவறு என்று சொல்லமுடியாது.

முன்னோரை அடிக்கடி நினைத்துப் பார்க்கவே தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் பெயரிட்டு சிலர் அழைக்கிறார்கள்” என பதிலளித்துள்ளார்.

இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும் மரபு எதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது? சுவாமி சாப்பிடமாட்டார். ஆனால், அவருக்குப் படைத்ததை என்ன செய்வார்கள்? என விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கே. விஜயலட்சுமி எழுப்பிய கேள்விக்கு கே.குமாரசிவாச்சாரியார் அளித்த பதிலின் விவரம் பின்வருமாறு-

‘‘நம் கண்முன் உலவுகின்ற காற்று, மின்சக்திகளை உற்பத்தி செய்ய மெஷின் மூலமாக எண்ணெய் ஊற்றி செயல்படுத்துகிறோம். அதேபோல இறைபிம்பங்களை யந்திரங்கள் மூலமாக உயிரூட்டல் கொடுத்துவிட்டு, அவற்றுக்கு சக்தி நிலைத்திருக்கவே நைவேத்தியம் படைக்கும் மரபு ஏற்பட்டது.

‘சுவாமி சாப்பிடமாட்டார்’ என்பதை அனைவரும் அறிவர். ஆனால், சுவாமியோ வேறுவிதமாகச் சாப்பிடுகிறார் என்பது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஊர்ஜிதமாகிறது. பூமி பிளந்து கட்டடங்களை விழுங்குவது, விமான விபத்து, நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் கடவுளின் திருவிளையாடல் என்றே நம்பப்படுகிறது.

நாம் செய்யும் பூஜை உபசாரங்களுக்கு செவிசாய்த்து, அபசாரங்களையும் ஏற்று, அருள்செய்ய, நைவேத்தியங்கள் / அன்னபலியை கோயிலில் செய்தாக வேண்டும். சுவாமிக்குப் படைத்ததை, வாசலில் காத்திருக்கும் ஏழைகள் பசியாறக் கொடுக்க வேண்டும். கோயில்களில் பூஜையின்போது, நைவேத்தியம் படைப்பது நின்றுவிட்டால், பூமியில் மழைக் குறைந்து, போருக்கு அரசன் தயாராவான். மக்களும் நோய்களால் அவதிப்படுவர். வறுமை தலைவிரித்தாடும். எனவே, இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பது, பூஜையின் முக்கிய அங்கமாக வருகிறது.’’