சினிமா

சாமி பாடலின் டியூனால் வந்த சர்ச்சை.. KISSA 47 பாடலை நீக்கியது படக்குழு

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

சாமி பாடலின் டியூனால் வந்த சர்ச்சை.. KISSA 47 பாடலை நீக்கியது படக்குழு
Devils Double Next Level crew removed the song KISSA 47
தில்லுக்கு துட்டு படத்தின் நீட்சியாக உருவாகியுள்ள DD Next Level திரைப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, மாறன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இப்படத்தினை இயக்கியுள்ள நிலையில், இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலுக்கு ஒருதரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பாடல், இந்து கடவுளான வெங்கடேஸ்வராவை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டுக்கொள்ளாத சென்சார் போர்டு:

மதத்தை இழிவுபடுத்தும் வகையிலுள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கியுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இருந்தாலும் பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என ஏன் தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கமளிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர். விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டப்படி நாளை படம் வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.