Harry Potter Actress Maggie Smith Passes Away : 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை மேகி ஸ்மித். ஹாரி பாட்டர் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான மேகி ஸ்மித், வயது மூப்பு காரணமாக காலமானார், அவருக்கு வயது 89. ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் புரொபசர் மினெர்வா மெக்கோனகல் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மேகி ஸ்மித். பிரிட்டிஷ் நடிகையான மேகி ஸ்மித்துக்கு 2 மகன்களும் 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி (The Prime of Miss Jean Brodie) கலிபோர்னியா சூட் (California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார் மேகி ஸ்மித். இந்நிலையில், மேகி ஸ்மித் மறைவு குறித்து அவரது மகன்கள் டோபி ஸ்டீபன்ஸ், கிறிஸ் லார்கின் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “மேகி ஸ்மித் காலமானதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மருத்துவமனையில் அவர் உயிரிழக்கும் போது அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உடனிருந்தனர். மேகி ஸ்மித்தின் மறைவு அவரது பேரக் குழந்தைகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டவுன்டன் அபே படத்தில் கூர்மையான நாக்கு கொண்ட டோவேஜர் கவுண்டஸ் கேரக்டரில் நடித்திருந்தார் மேகி ஸ்மித்(Maggie Smith). இந்த கேரக்டருக்கு ஹாலிவுட் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 1934ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இங்கிலாந்தில் பிறந்த மேகி ஸ்மித், ஆரம்பத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். 1963ல் வெளியான தி வி.ஐ.பி.எஸ் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரியான அவர், தொடர்ச்சியாக 60 ஆண்டுகள் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தார். ஹாரிபாட்ட படத்தின் புரொபசர் கேரக்டர் மூலம் ரசிகர்களின் நினைவில் என்றைக்கும் வாழ்வார் என அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.