சினிமா

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.. வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.. வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
அஜித்-அன்புமணி ராமதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நடிப்பு மட்டுமில்லாமல், கார் ரேஸ், ட்ரோன் பயிற்சி வழங்குவது என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்து வரும் நடிகர் அஜித்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு, பத்ம பூஷன் விருதை அறிவித்தது.

கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு இந்த விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த மதிப்புமிக்க விருது தமிழ் திரையுலகின் பல நட்சத்திரங்களுக்கு அவர்களின் கலைத்திறனுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, நேற்று டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் பத்ம பூஷன் விருதை நடிகர் அஜித்குமார் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் மற்றும் அஜித்குமாரின் தம்பி என அனைவரும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிய வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

அன்புமணி வாழ்த்து

இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்! இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.