சினிமா

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தை பார்வையிட நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அப்போது அப்பகுதியில் ராணுவ வீரர் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை நோக்கி தாக்குதல் நடத்தியதில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை ஒட்டி தமிழக உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் செயல்பட்டு வரும் உளவுத்துறை, தீவிரவாத தடுப்பு பிரிவு, கியூ பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரமுத்து பதிவு

இந்நிலையில், காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “காஷ்மீர்ப் படுகொலையைக்
கனத்த வார்த்தைகளால்
கண்டிக்கிறேன்

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில்
உறைய வேண்டியவை
பனிக்கட்டிகள்தாம்;
இரத்தக் கட்டிகள் அல்ல

தீவிரவாதம் என்பது
கோழைகளின் போர்முறையாகும்;
பூக்களின்மீது தொடுக்கப்படும்
வன்முறையாகும்

புலிகளின்மீது சினம்கொண்டு
கிளிகளைக் கொல்வது
நியாயத்தைக் காயப்படுத்தாதா?

எந்தவொரு கோரிக்கையும்
உடல்களின்மீது
இரத்தத்தால் எழுதப்படுவதல்ல

இந்திய அரசின் துப்பாக்கிகள்
தூக்கம் கலையவேண்டும்

இனி இது
நடக்காதபடி
அடக்க வேண்டும்

28 இருதயங்கள்
தங்கள் துடிப்பை
நிறுத்திய இடத்தில்
துடிக்கின்றன
இந்தியாவின் இருதயங்கள்

ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.