சினிமா

'தக் லைஃப்' படத்தின் 3 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.30.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தக் லைஃப்' படத்தின் 3 நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Thug life 3 days collection
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

தமிழிலிருந்து பிரிந்தது தான் கன்னடம் என கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையானது. இதுகுறித்து கர்நாடக நீதிமன்றம் கமல்ஹாசனை, 'நீங்கள் என்ன மொழி அறிஞரா? எனவும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது எனவும் கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கக் கூறியது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெறாத நிலையில், இந்த படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகவில்லை. இதனால் கர்நாடகா வாழ் கமல் ரசிகர்கள் தமிழக எல்லையான ஓசூருக்கு படையெடுத்தனர். ஓசூரில் உள்ள திரையரங்குகளில் தக் லைஃப் திரைப்படத்தை பார்த்தனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்தது தான். இந்த படம் கமல்ஹாசனின் 234-வது திரைப்படம் ஆகும்.

'தக் லைஃப்' திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் 3000 காட்சிகளுக்கும் மேலும் திரையிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான 'நாயகன்' படத்தை போலவே தக் லைஃப் படமும் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களில் பலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினார்.

'தக் லைஃப்' படம் வெளியான முதல் நாளில் இந்திய முழுவதும் ரூ.17 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய முழுவதும் ரூ.30.15 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் நேற்று (ஜூன் 7) மட்டும் ரூ.7.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் முன்னணி நட்சத்திரங்கள் நிறைந்த இப்படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு வசூல் செய்யவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.